Wednesday, March 12, 2014

சர்வதேச சமூகம் எங்களுக்காக பிள்ளை பெறமுடியாது!

சர்வதேச சமூகம் எங்களுக்காக பிள்ளை பெறமுடியாது!
டக்ளஸ் தேவானந்தா -





சர்வதேச சமூகம் எங்களுக்காக பிள்ளை பெறமுடியாது நாமே நமது பிள்ளையை பெற வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (11)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்-

ஐ.நா அமர்வினை எமது பிரச்சினைகளுக்கான தீர்வுக்களமாக நாம் பார்க்கமுடியாது. அழுதாலும் பிள்ளையை அவளே பெறவேண்டும் என்ற அடிப்படையில் ஐ.நா அமர்வினை நாம் மருத்துவிச்சியாக பார்க்கமுடியுமே தவிர பிள்ளை பெறும் தாயாக பார்க்க முடியாது.

எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வு காண வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பி பயனில்லை. எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு.

அந்த வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கம் வகிக்காதது துரதிஷ்டவசமானதே.

சர்வதேச நாடுகளின் துணையுடன் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்போம் என்றும், உலக நாடுகள் எமது பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன என்றும், உலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையின் பலத்தை காட்ட எமக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களுக்கு ஆசை வார்த்தைகளை அள்ளி வழங்கி, தேர்தல் வாக்குறுதிகளாகக் கூறி தேர்தலில் வெற்றியும் பெற்றது.

ஆனால் தற்போது ஜெனீவா மாநாட்டின் மூலம் எமது மக்களுக்கு எந்த விமோசனங்களும் கிடைக்கப் போவதில்லை என்றும், தாம் நம்பியிருந்த உலக நாடுகள் கைகளை விரித்து, எமது மக்களை ஏமாற்றி விட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது நீலிக்கண்ணீர் வடித்து, ஊடகங்களுக்கு அறிக்கை விடுகின்றது என்றும் அமைச்சர் கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment