Monday, January 27, 2014

இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைககளை நவனீதம்பிள்ளை சமர்ப்பிப்பார்!

இலங்கை தொடர்பில் இரண்டு அறிக்கைககளை நவனீதம்பிள்ளை சமர்ப்பிப்பார்!




ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை தொடர்பில் மார்ச் மாதம் 26 ஆம் திகதி இரண்டு அறிக்கைககளை சமர்ப்பிக்க உள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25ஆம் அமர்வுகளிலும், ஆணையாளரின் ஆண்டறிக்கையிலும் இலங்கை விவகாரம் பற்றி குறிப்பிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஆணையாளரின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிவிப்பார் எனக் குறிப்பிடப்படுகிறது.

அண்மையில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும் நவனீதம்பிள்ளை தமது அறிக்கைகளில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பி.பீ.ஜி.கலுகல்லவின் நினைவாக உருவச்சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

பி.பீ.ஜி.கலுகல்லவின் நினைவாக உருவச்சிலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!






கேகாலை மக்களுக்காக சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் பி.பீ.ஜி.கலுகல்லவின் நினைவாக  கேகாலை நகர மத்தியில் அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று  திறந்துவைத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்பகால உறுப்பினரான அவர், அமைச்சரவை அமைச்சர், தூதுவர், மற்றும் உயர்ஸ்தானிகராக செயறலாற்றியவராவார்.



அத்துடன் கேகாலை நகரில் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக 3600 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வெளிசுற்றுப்பாதையும்,

சுமார் 7 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட கேகாலை அம்பன்பிற்றியவில் உள்ள டோசன் மாளிகையும்  ஜனாதிபதி இன்று திறந்துவைத்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

Sunday, January 26, 2014

மகளிருக்கான புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

மகளிருக்கான புதிய நீச்சல் தடாகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!






கேகாலை ஷாந்த ஜோசப் பெண்கள் வித்தியாலயத்தில் புதிய நீச்சல் தடாகம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் ஜனாதிபதி உரையாற்றுகையில்:

நாட்டிலுள்ள மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த விஷேட வேலைத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. எதிர்காலத்தில் நாட்டில் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் உருவாக்கப்படுவார்கள்.

உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பினாலேயே நாட்டில் சுதந்திரமும்  அபிவிருத்தியும் மலர்ந்துள்ளது.

உறுதியான இலக்கு, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பு என்பவற்றை நடைமுறைப்படுத்தினால், அனைத்து சவால்களையும் ஜெயிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கூறினனார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இராணுவ வீரர்களுக்கான 'வர்ண இரவு-2013' கொண்டாட்டம்!


 





இராணுவ வீரர்களுக்கான 'வர்ண இரவு-2013' கொண்டாட்ட நிகழ்வுகள்  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த வெள்ளியன்று இடம் பெற்றது.

விளையாட்டினுடாக நல்லிணக்கம்எனும் கருப்பொருளில் இராணுவ விளையாட்டுத் துறையில் பிரகாசிப் போருக்காக    
இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வைபவத்தில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.


பாரம்பரிய விளக்கேற்றல் மற்றும் உயிர் நீத்த யுத்த வீரர்களுக்கான ஒரு நிமிட மௌன அஞ்சலியை அடுத்து இராணுவ கீதம் இசைக்கப்பட்டு பணிப்பாளர் நாயகம் (விளையாட்டு) மேஜர் ஜெனரல் ஜானக்க ரத்னாயக்கவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் சேவாவனிதாப் பிரிரவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, சேவாவனிதா இராணுவப்பிரிவின் தலைவி திருமதி.தமயந்திரத்னாயக்க, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினரின் துனைவியர்கள் மற்றும் பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

மீனவர் பிரச்சினை தொடர்பில் நாளை சென்னையில் பேச்சுவார்த்தை!


 



இந்தியா - இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தை நாளை காலை சென்னை,  தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.  வளாகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


தெரிவு செய்யப்பட்ட இருநாட்டு மீனவப் பிரதிநிதிகள் இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குழுவை தெரிவு செய்வதற்கு இலங்கை அரசு கால அவகாசம் கோரியதால் இம்மாதம் 20 ஆம் திகதி  நடைபெற விருந்த பேச்சுவார்த்தையை தமிழக அரசு 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இந்தியாவுக்கு பயணம்!

இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இந்தியாவுக்கு பயணம்!


இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கையின் விசேட பிரதிநிதிகள் குழு இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளது.

இந்த குழுவில்  கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெட்டிஆரச்சி உட்பட 5 பேர் அங்கம் வகிக்கின்றர்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளார்.

இதனைத் தவிர யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம் மற்றும் தென் பகுதி மீனவர் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 10 மீனவர்களும் இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

Friday, January 24, 2014

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம்!

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம்!

-தயான் ஜயதிலக்க ஹேஷ்யம்-





இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்படலாம் என இலங்கையின் சிரேஷ்ட ராஜதந்திரிகளில் ஒருவரான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஒருவரின் ஊடாகவோ அல்லது ஆணைக்குழு ஒன்றின் மூலமாகவோ இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட்டு விட்டால் அதனை தடுத்து நிறுத்துவது சாத்தியமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை மீறியதாக இலங்கை மீது குற்றம் சுமத்தப்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் இது ஆபத்தான நிலைமையாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளின் போது நேரடியாக இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடிய அபாயம் இல்லை என்ற போதிலும் உறுப்பு நாடுகள் தனித் தனியாக இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

லலித் வீரதுங்க நவநீதம்பிள்ளையுடன் பேச்சு!

லலித் வீரதுங்க நவநீதம்பிள்ளையுடன் பேச்சு!



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் செயலர் லலித் வீரதுங்க ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்து, இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து விபரித்துள்ளார். ஜெனீவாவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, லலித் வீரதுங்க எடுத்துக் கூறியுள்ளார்.

இதையடுத்து, அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஆணையர் அன்டனியோ குரேரஸ், அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் தலைவர் பீட்டர் மௌரர் ஆகியோரையும் லலித் வீரதுங்க சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தச் சந்திப்புகளை அடுத்து, இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலவரங்கள் குறித்து, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். இந்த சந்திப்புகளில், ஜனாதிபதியின் செயலருடன், உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றும் பங்கேற்றுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

கச்சைத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை இல்லை!



கச்சைத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை இல்லை!



-இந்திய மத்திய அரசு பதில்-





கச்சைத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு இந்திய மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மேலும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன் காரணமாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை கடற்படையின் தாக்குதல்களிலில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாத்திடும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு  நேற்று (23.01.14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மத்திய அரசு மேற்கண்ட விளக்கமளித்தது.

மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

கடல் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையே கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இரு நாடுகளுக்கும் அவரவர் நாட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள முழு இறையாண்மையை அந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்கின்றன.

இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லைப் பிரச்சினையும், கச்சைத் தீவு யாருக்கு சொந்தம் என்பதும் ஏற்கெனவே முடிந்து போன பிரச்சினை.

கச்சைத் தீவுப் பகுதியைப் பொறுத்தமட்டில் இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் அங்கு செல்லலாம். அங்குள்ள அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை நம் மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கச்சைத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை.
-எம்.ஜே.எம். தாஜுதீன்