பொதுபல சேனா செயலாளரிடம் 50 கோடி ரூபா கேட்கிறார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்!
தன்மீது அவதூறு கூறியதற்காக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இல்லையேல் 50 கோடி ரூபாவை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பதில் கோரும் கடிதம் ஒன்றை சட்டத்தரணிகள் மூலம் அமைச்சர் பொதுபல சேனா அமைப்பின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 20 ஆம் ஆம் திகதி கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் என்மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.
வில்பத்து தேசய பூங்கா என்னால் அழிக்கப்படுவதாகவும், வில்பத்து தொடக்கம் மன்னார் வரையில் ஒரு முஸ்லிம் வளையம் என்னால் உருவாக்கப்படுவதாகவம், வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு வீடுகள் அமைப்பதில் தலையிட்டு இலங்கையை ஆக்ரமிப்பதாகவும், நான் நீதிமன்றத்தை தாக்கியதாகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்தச் செய்திகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.
எதுவித ஆதாரங்களும் இல்லாத இந்தக் குற்றச்சாட்டுக்கள் சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை உருவாக்க களம் அமைத்துள்ளன.
எனவே இப்பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர் இரண்டு வாரங்களுக்குள் வாபஸ் பெற்று மன்னிப்புக் கோர வேண்டும். இல்லாவிட்டால் நஷ்ட ஈடாக 50 கோடி ரூபா செலுத்தவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment