Tuesday, February 4, 2014

சமாதானத்தை விரும்பாதவர்களே ஜெனீவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்!

சமாதானத்தை விரும்பாதவர்களே ஜெனீவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்!

-66 ஆவது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி-







பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமாதானத்தை தெற்கு மக்கள் மட்டுமல்ல வடக்கு மக்களும் அனுபவித்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு  முயற்சிப்போர் சமாதானத்தை விரும்பாதவர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

66ஆவது சுதந்திரதினத்தின் பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வைபவம் கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெற்றது. சுதந்திரதினத்தின் பிரதான வைபவம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மாவத்தையை ஜானதிபதி திறந்து வைத்தார்.

அதிதிகள் வருகையை அடுத்து குதிரைப்படை சகிதம் முப்படைகளின தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பிரதான மேடையை வந்தடைந்தார். அவரை பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையிலான குழுவினர் வரவேற்று பிரதான மேடைக்கு அழைத்துச் சென்றனர்.



கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இனங்களையும் சேர்ந்த 110 மாணவிகள் தேசிய கீதமிசைக்க தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன், உயிரிழந்த முப்படையினருக்கும் தேசபிமானிகளுக்கும் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டன.

அவர் அங்கு நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"வரலாற்று புகழ்மிக்க கேகாலையில் 66ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றோம். நாடு அபிவிருத்தி பாதையில் முன்னேறிக்கொண்டிருகின்றது. இவற்றுக்கெல்லாம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமையே முக்கியமான காரணமாகும்.

2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரே வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துவருகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரையிலும் ஒரு குண்டுகூட வெடிக்கவில்லை. அவ்வாறு சுதந்திரத்தை வடக்கு மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் மனித உரிமை, ஜனநாயகம் ஆகியவற்றை  முன்னிறுத்திக்கொண்டே நாட்டுக்குள் வருகின்றனர்.



நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டுக்கு நன்மைகள் ஏற்படப் போவதில்லை.



தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் மறந்து விட்டது. மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது.



இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை புலிகள் கொன்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வடக்கு மக்கள் முதல் அனைவரும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சுதந்திரத்தை தட்டிப்பறிக்க எவரையும்  இந்த அரசாங்கம் அனுமதிக்காது.

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பலம்பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,200 கைதிகள் விடுதலை!

சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,200 கைதிகள்  விடுதலை!



இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் கீழ், நாளை 1,200 கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிறு குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கடன் முறையில் சிறியளவிலான நிதியுதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்தது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மஹஜர் கையளிப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மஹஜர் கையளிப்பு!





இந்திய வீட்டுத் திட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்து வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
வவுனியா காமினி சிங்கள மஹா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி மன்னார்- வவுனியா வீதி ஊடாக வவுனியா கச்சேரியினை சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியிருந்தனர். அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு நன்றி தெரிவிப்பதைப் போன்ற வாசகங்களை கொண்ட பதாகைகளை சுமந்து சென்றதுடன் கோஷங்களையும் எழுப்பினர்.

அதன்பின் இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குரஷித், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்காக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ச.மோகநாதனிடம் மகஜரொன்றை ஆர்ப்பாட்டக்கார்ரகள் கையளித்தனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஜனாதிபதி கண்டுகளித்தார்!

கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஜனாதிபதி கண்டுகளித்தார்!







இலங்கையின் முதலாவது 'சுப்பர்' தர கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கண்டுகளித்தார்.

விமானப் படையின் கட்டுக்குருந்தை விளையாட்டுத் திடல் ஓட்டப் பாதையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.

இலங்கை விமானப் படையுடன் இணைந்து மூன்று பிரபல விளையாட்டுக் கழகங்கள் ஏற்பாடு செய்த இந்தப் போட்டிகளில் இலங்கையின் முன்னணி போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

Saturday, February 1, 2014

தெல்தொட்ட முஸ்லிம் வித்தியாலயத்துக்கு வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு!


தெல்தொட்ட முஸ்லிம் வித்தியாலயத்துக்கு வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு!



கண்டி தெல்தொட்ட முஸ்லிம் வித்தியாலயத்துக்கு பேண்ட் வாத்தியக் கருவிகளை முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று முன்தினம் கையளித்தார்.

இப்பாடசாலை மாணவ, மாணவியர் விடுத்த கோரிக்கையையடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாடசாலை உதவி அதிபர் கே. பிரபாகரனிடம் ஷிரந்தி ராஜபக்ஷ வாத்தியக் கருவிகளை கையளித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல் குறித்து நிஷா தேசாய் பிஸ்வால் கவலை!

வணக்கஸ்தலங்கள் மீதான தாக்குதல் குறித்து நிஷா தேசாய் பிஸ்வால் கவலை!




இலங்கையில் பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் என்பவற்றின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், எரியூட்டல் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பற்றி விசனம் தெரிவித்தர் ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால்.

அவற்றைத் தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் எடுக்கப்படாதிருப்பதையிட்டு கவலையையும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் நேற்று  நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சில் பிற்பகல் சந்தித்து கலந்துரையாடினார்.

திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அடுல் கெஷாப் மற்றும் அவர்களது குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே.சிஸன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் போதே அவர் வணக்கஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தார்.
நாட்டின் குற்றவியல் சட்டம் தொடர்பாகவும், விரைவில் அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள புதிய சட்டங்கள் மற்றும் சட்ட திருத்தங்கள் தொடர்பாகவும் இச்சந்திப்பில் பரவலாக கலந்துரையாடப்பட்டது.

மூன்று தசாப்தகால யுத்தத்தின் விளைவாக வடகிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் செயலிழந்திருந்த நீதிமன்றங்கள் மீண்டும் செயல்பட்டு வருவதாகவும், அண்மையில் சகல வசதிகளுடனும் கூடிய புதிய மூன்று நீதிமன்றக் கட்டடத் தொகுதிகள் வட மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இராணுவ புலனாய்வுக்கான தலைமையகம் திறந்துவைப்பு!

இராணுவ புலனாய்வுக்கான  தலைமையகம் திறந்துவைப்பு!






கரந்தெனியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவப் புலனாய்வுப்பிரிவின் தலைமையகத்தை  பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்று  திறந்துவைத்தார்.

இது தொடர்பான வைபவம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக தலைமையில் நடைபெற்றது.

தாய்நாட்டுக்காக தம்மை தியாகம் செய்த 8 புலனாய்வுப்பிரிவு இராணுவ அதிகாரிகள் மற்றும் 56 படை வீரர்களை நினைவு கூறுமுகமாக அமைக்கப்பட்டுள்ள யுத்த வீரர்நினைவுத் தூபியையும் செயலாளர் திறந்துவைத்தார்.

புலனாய்வுப்பிரிவு 1990 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி உருவாக்கப்பட்டதாகும். இதன் முதலாவது படையணி கொழும்பு முத்தையா வீதியில் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இந்தியா கைவிரி்த்துவிட்டது!


இந்தியா கைவிரி்த்துவிட்டது!




ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தை தோற்கடிக்க எந்த வகையிலும் உதவ முடியாது என்று இந்தியா கைவிரித்து விட்டதாக எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதாலேயே, தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்த விரும்பாத இந்திய மத்திய அரசு இலங்கைக்கு உதவ மறுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை புதுடெல்லியில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், அனைத்துலக விசாரணை கோரப்படாது என்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்று அமைச்சர் பீரிஸ் கோரியிருந்தார் என்று இந்திய வெளிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் மனோநிலையில் இருந்த சல்மான் குர்ஷித், இதற்கு எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். அதேவேளை, வாஷிங்டனுடனேயே இதுபற்றி நேரடியாகப் பேசிக் கொள்ளுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு சல்மான் குர்ஷித் ஆலோசனை கூறியுள்ளார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்!

செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி  பார்வையிட்டார்!







களுத்துறை, நாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.

அத்துடன் அங்கு பரிசோதனைக்காகவும் பயிற்சி்க்காகவும் தங்கியுள்ள நோயாளர்களுடன் ஜனாதிபதி உரையாடியதோடு அவர்களுக்கு பழங்கள் அன்பளிப்பு செய்தார்.
தேசிய வடிவமைப்பாளரான அருன சமரவிக்ரம இந்த செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி நிருவகித்துவருகிறார்.

அதன் உற்பத்தித் தரத்துக்காக அவருக்கு 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதும் 2007 ஆம் ஆண்டில்  சர்வதேச விருதுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்