-மினுவாங்கொடையில் ரவுப் ஹக்கீம்-
பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடுமென அமைச்சர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திருக்கிறார். பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால், இந்த நாடு எப்பொழுதோ பிளவுபட்டிருக்கும் என்பதை நான் நண்பர் மேர்வின் சில்வாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.’
இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மேல் மாகாண சபைத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மினுவங்கொடை தேர்தல் தொகுதியில், கல்லொழுவ கிராமத்தில் வியாழக்கிழமை (13) மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
இக் கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், முஸ்லிம் காங்கிரஸ் மூத்த துணைத் தலைவர் முழக்கம் எ.எல். அப்துல் மஜீத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன், கம்பஹா மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் ஷாபி ரஹீம் உட்பட ஏனைய வேட்பாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், பெருந்தொகையினரான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
‘பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடுமென அமைச்சர் நண்பர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திருக்கிறார்.
பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இந்த நாடு எப்பொழுதோ பிளவுபட்டிருக்கும் என்பதை நான் நண்பர் மேர்வின் சில்வாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
பிரபாகரனுடைய போராட்டத்திற்கு ஒத்துழைக்காததனால் தான் வடக்கிலிருந்து முற்றாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதோடு, வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் அவர் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்களுடைய கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதன் நோக்கம், அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு சுகபோகங்களை சுகிப்பதற்கு அல்ல. அவ்வாறான அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.
களனி தொகுதியின் சுதந்திரக் கட்சி அமைப்பாளர் நண்பர் மேர்வின் சில்வா சில காலம் வாயை மூடிக்கொண்டிருந்தார். இப்பொழுது மீண்டும் வாயைத் திறந்திருக்கிறார்.
ஆகையால், குறிப்பாக ஊடகவியலாளர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களது புகைப்படக் கருவிகள் பறித்தெடுக்கப்படும் அபாயம் மறுபடியும் ஏற்படலாம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யதார்த்த பூர்வமாக கருத்துக்களை எடுத்துக் கூறும் கட்சியாகும். மனித உரிமைகள் மீறப்படும் பொழுது அது பற்றி வெளிப்படையாக கதைப்பதில் என்ன தவறு இருக்கிறது? நாட்டின் மீதான நல்லெண்ணத்துடனேயே அவ்வாறு கூறுகிறோம்.
அவ்வாறன்றி மனித உரிமை ஆணையாளர் அம்மையாரை மணமுடிக்க விருப்பம் தெரிவித்து, நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய இழிவான செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை.
அதுபோக, ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பாங் கீ மூனை பதவி விலகுமாறு கோரி இங்குள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்னாள் இறக்கும் வரை உண்ணாவிரதம் எனக் கூறி அமைச்சர் ஒருவர் மல்லாந்து படுத்துறங்கியதாலும் பயனில்லை.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் செய்யும் கட்சியல்ல. சோற்றுப் பார்சல்களை கொடுத்து பஸ்களில் கொண்டு வந்து சேர்க்கும் கட்சியும் இதுவல்ல. களனித் தொகுதியில் இருந்து தான் சோற்றுப் பார்சல்கள் கொடுத்து கொழும்புக்கு ஆட்கள் அதிகம் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றனர்.
சோற்றுப் பார்சல்களை வழங்கி பஸ்களில் ஆட்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை.
நாங்கள் கூறவேண்டியவற்றை ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகவே கூறி வருகிறோம். நாங்கள் சூழ்ச்சி செய்கிறோம் என்பது அதன் அர்த்தமல்ல.
அரசாங்கத்தில் உள்ள கட்சிகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியான ஆகக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தான். கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்து கொண்டிருப்பதும் முஸ்லிம் காங்கிரஸ் தான்.
அவ்வாறான கட்சியின் தலைமைக்கு வாய்மூடிக்கொண்டிருக்குமாறு கட்டளையிடுவதற்கு இந்த மேர்வின் சில்வா என்பவர் யார்? அவ்வாறு ஆணை பிறப்பிப்பதற்கு அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவர் தான் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
அவரது களனி ஆசன அமைப்பாளர் பதவிக்கு தேர்தல் முடிந்த கையோடு என்னவாகப் போகின்றதோ தெரியாது. இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.
கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் அரசியலில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கும் முயற்சியின் ஊடாக உயரிய கௌரவம் முஸ்லிம் காங்கிரஸூக்கு கிடைக்கும்.
அவ்வாறான கௌரவம் தான் இந் நாட்டில் அரசாங்கத்திலும், எதிர்க்கட்சிகளிலும் சர்வதேச சமூகத்தின் முன்னிலும் இந்த சமூகத்தின் பிரச்சினைகளை முன் வைப்பதற்கான புதிய தெம்பையும், உத்வேகத்தையும், உற்சாகத்தையும் எமது கட்சிக்கு ஏற்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் கட்சி பலவீனமானது, பலவீனப்பட்டு விட்டது என்ற ஒரு தோற்றப்பாட்டை சில தீய சக்திகள் ஏற்படுத்த எத்தனித்து வருகின்றன.
கட்சியின் உறுப்பினர்கள் சிலர் சுயநல நோக்கங்களுக்காக இன்னொரு கட்சிக்கு தாவினார்கள் என்ற காரணத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் பலவீனப்பட்டுவிடவில்லை. அந்த நபர்கள் தான் பலவீனப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் தான் பேசுவதற்கு வக்கில்லாத, வங்குரோத்து நிலைக்கு மாறியிருக்கிறார்கள். அதனால் அவர்களை தத்தெடுத்துக்கொண்ட அரசாங்கமாக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகளை திரட்டுகின்ற காரியத்தில் எதனையும் பெரிதாக சாதித்துக்கொள்ள முடியாது. இது ஜனாதிபதி கூட ஏற்றுக்கொள்கின்ற விஷயமாக மாறிவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக்கொள்ள அவர் முயற்சித்த பொழுது, முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை பிரித்தெடுத்து, அவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து, முஸ்லிம் காங்கிரஸை துண்டாடுவோம் என அவருக்கு ஆலோசனை கூறப்பட்ட பொழுது, அதை நிராகரித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸை அதன் தலைமையோடு சேர்த்து, ஒன்றிணைத்து உள்வாங்குவதன் மூலம் தான் அதன் வாக்கு வங்கியை தங்களோடு வைத்துக்கொள்ள முடியும் என்ற ஒரே நம்பிக்கையோடு தான் முடிவெடுத்ததாக ஜனாதிபதி எங்களிடம் சொன்னார்.
ஆனால், அண்மைக்காலமாக வழமையைப் போல சில சந்தர்ப்பங்களில் ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதங்கள் நடைபெறுவது தவிர்க்க முடியாதது.
இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற கட்சிகளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு அடுத்தபடியாக ஆகக் கூடுதலான ஆசனங்களை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் எங்களை வாய்மூடி மௌனியாக இருக்கின்ற நிலைக்கு யாரும் பலவந்தப்படுத்த முடியாது. சில பலவந்தமான முடிவுகளை எடுக்கும் போது அது அரசாங்கத்தை சங்கடத்துக்குள்ளாக்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில் இவ்வாறான சங்கடங்கள் சர்வ சாதாரணமாக எந்த அரசாங்கத்திற்கும் ஏற்படக் கூடியது. ஒரு கூட்டரசாங்கத்தின் அடிக்கடி இவ்வாறான சங்கடமான நிலைமைகள் தோற்றம் பெறும்.
அண்மையில் கசினோக்கள் எனப்படும் சூதாட்ட நிலையங்கள் பற்றி ஒரு சட்டமூலம் வந்தபோது, முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய கட்சிகள் சில அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எனவே அதனைப் படிப்படியாக கைவிட்டாக வேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் உள்ளாகியது.
பல சந்தர்ப்பங்களில் சட்ட மூலங்கள் கொண்டு வரப்படுவதை நாங்கள் தடுத்திருக்கிறோம். அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு நீதிமன்றத்திற்கு போய் தடை உத்தரவு எடுத்திருக்கிறோம். இந்த விடயங்களை அரசாங்கத்துக்குள் நடக்கின்ற ஆக்கபூர்வமான அம்சங்களாக காண்பது என்பது முக்கியமானது.
இவ்வாறான முயற்சிகளின் ஊடாக அரசாங்கம் பயணிக்கின்ற பாதையில் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்து அதனை விடுவிப்பதுதான் எங்களது நோக்கம்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து வெளியில் வந்தால் அவர்களுக்கு நல்லதென எதிர்க்கட்சிக்காரர்கள் எதிர்பார்ப்பார்கள். என்னைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து அவர்களுக்கு ஆட்சி அமைப்பதற்கான பங்களிப்பை இரண்டு விடுத்தங்கள் செய்தவன் என்ற முறையிலும், அவ்வாறே இரண்டு தடவைகள் அரசாங்கத்திலிருந்து விலக்கப்பட்டும், விலகியும் வந்தவன் என்ற முறையிலும், என்னுடைய பட்டறிவு என்பது மிகவும் ஆழமானது.
வஞ்சகமாக எந்தவிதமான சூழ்ச்சிகளிலும் ஈடுபடும் உத்தேசம் எனக்கு அறவே கிடையாது. ஆனால், சமூகத்தின் பிரச்சினை என்று வரும் பொழுது அது பற்றி உரத்துப் பேசுவதற்கான தார்மீக உரிமை எங்களுக்கு இருக்கிறது என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.
நாங்கள் விமர்சிக்கப்படுகிறோம். ஆனால், அந்த விமர்சனங்களை தாங்கிக் கொள்ளக் கூடிய மனப் பக்குவத்துடன் தான் நாங்கள் அவற்றை கையாண்டு வருகிறோம்.
இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு விதமான நெருக்கடிகளை நாங்கள் எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில், அடுத்து வருகின்ற ஒரு தேசிய மட்டத் தேர்தலில் ஒரு பேரம் பேசும் சக்தி எங்களுக்கு வரும் என்ற நம்பிக்கையில், அதற்கு முன்னோடியாக நடைபெறும் இந்த மாகாண சபைத் தேர்தலை சரிவர பயன்படுத்துவது முக்கியமானது.
மிகப் பலமான நிலையிலே இருப்பதாக அரசாங்கம் நினைத்துக்கொண்டிருக்கிறது. அந்த மேலெண்ணத்தின் காரணமாகத் தான் அரசாங்கம் அசமந்தப் போக்கோடு சில விடயங்களை கையாண்டு வருகின்றது என்பதை நாங்கள் கண்கூடாகக் காண்கிறோம்.
ஆனால், அந்த அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுகின்ற ஓர் அரசியல் பலம் எங்களிடம் இருக்குமானால், எமது சமூகத்தின் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கான பலம் மேலும் அதிகரிக்கும்.
ஆதலால் தான் அடுத்து வருகின்ற தேசிய மட்டத் தேர்தலில் முன்னைய ஜனாதிபதிகள் இருவரை தீர்மானித்த சக்தியாக இருந்த நாம் மீண்டும் அந்த நிலைமைக்கு வரக்கூடியதாக இருக்கும்.
நெருக்கடிகளைப் பற்றிப் வெறுமனே பேசிக்கொண்டு, அலங்கார வார்த்தைகளை அள்ளிக் கொட்டுகின்ற கட்சியாக மட்டும் இருக்க முடியாது. தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் விதத்தில் அரசாங்கத்தை உந்தித் தள்ளுகின்ற ஆற்றலை இந்தக் கட்சிக்கு தருவதற்கான தேர்தலாக இந்த மாகாண சபைத் தேர்தலை நீங்கள் ஆக்க வேண்டும்.
முப்பது ஆண்டு காலம் ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டு சலித்துப் போன தமிழர் சமூகம், அகிம்சை போராட்டத்திற்கு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வந்தது. சக்கரம் சுழன்று மீண்டும் முன்னைய இடத்திற்கு வந்திருக்கிறது.
ஜனநாயக அரசியலைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்தையும் இணைத்துக்கொண்டு தங்களது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.
அந்தக் கண்ணோட்டத்தில், ஜனநாயகத்திலே நம்பிக்கை கொண்டுள்ள கட்சியாகவும், ஆயுத கலாசாரத்தை நாடாத கட்சியாகவும், அதேவேளையில் சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் சில விடயங்களை மிகவும் சாணக்கியமாக கொண்டு செல்லக் கூடிய கட்சியாகவும் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்வதன் மூலம் தான் எங்களது உரிமைகளை வென்றெப்பதற்கான சரியான பாதையை நாங்கள் வகுத்துக்கொள்ள முடியும் என்றார்.
கல்லொழுவையில் புதிய தெரு, ஜென்னத் மஹல்லா, ஹிஜ்ரா மாவத்தை, பஸார் வீதி (அலுவலகம் திறப்பு), தக்கிய்யா வீதி, முனாஸ் மாவத்தை ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment