கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாக விடுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் ஏழு தமிழ் மாணவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலும் இரண்டு சிங்கள மாணவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒரு மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியொன்றில் மாணவர்களிடையே ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் தொடர்ந்து இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருந்த முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த நான்காம் வருட சிங்கள மாணவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர் எனக் கூறப்படுகின்றது. மதுபோதையில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனப் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
தாக்குதலுக்கு பேனாக்கத்தி மற்றும் மின் அழுத்தி என்பனவும் பாவிக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment