Monday, April 14, 2014

சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள் கைது!

சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள் கைது!




இலங்கை::சட்டவிரோதமான முறையில் கடல்வாழ் உயிரினங்களை எடுத்துச் சென்ற ஐந்து சீன பிரசைகள், கொள்ளுப்பிட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வான் மூலம் இவற்றை எடுத்துச் சென்ற வேளையில், கொள்ளுப்பிட்டியில் வீதி கடமையில் ஈடுபட்டிருந்தவர்களால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சீன பிரசைகளிடம் இருந்து உலர்த்தப்பட்ட 92 கடல் குதிரைகள், 90 கடல் அட்டைகள், 24 கடல் நத்தைகள், 70 சிப்பிகள் மற்றும் முருங்கை கல் பாறைகளின் பகுதிகள் எனபன கைப்பற்றப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் அரசு பேச்சு!

மோடி உள்ளிட்ட இந்தியத் தலைவர்களுடன் அரசு பேச்சு!



நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் எல்லா பிரதான தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசாங்கம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருவதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இது பற்றி அமைச்சர் மேலும் கூறியதாவது-
இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்று நம்பப்படும் நரேந்திர மோடியுடன் இலங்கை அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கிறது.

இலங்கை விவகாரத்தில் நரேந்திரமோடி வேறுபட்ட அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என்று கூறப்படுகின்ற நிலையில், இலங்கை அரசாங்கம் அங்கு மாறி வரும் சூழ்நிலைகளை இலங்கை அறிந்தே வைத்துள்ளது.
நாம் நரேந்திரமோடியுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இந்தியத் தேர்தலின் முன்னேற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இந்தியத் தேர்தலில் போட்டியிடும் எல்லா பிரதான கட்சிகளுடனும் நாம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருகிறோம்.

அவர்கள் எமது அயலவர்கள். அவர்களுடனான பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

நடிகர் ரஜினிகாந்தை மோடி இன்று சந்தித்துப் பேசினார்!

நடிகர் ரஜினிகாந்தை மோடி இன்று சந்தித்துப் பேசினார்!



தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னை வந்த பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார்.

சென்னை - போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இன்று (13) மாலை 6.35 மணிக்கு இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பில் ரஜினியும் மோடியும் என்ன பேசினார்கள் என்ற  விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.எனினும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ரஜினிக்கு மோடி வாழ்த்து தெரிவிக்க நேரில் சந்திதத்தாக பாஜகவினர் கூறினர்.
ரஜினியின் இல்லத்துக்குச் சென்று திரும்புவதற்குள், ரஜினி உடனான சந்திப்பின் புகைப்படப் பதிவு உடனடியாக மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிடப்பட்டது.

'ரஜினி உடன்' என்று பதிவிடப்பட்ட மோடியின் அந்த ட்வீட், சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!

ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!




பிரதமர் தி.மு ஜயரட்ண தமது குடும்பத்தாருடன்  தங்காலையிலுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கால்டன் இல்லத்துக்கு  இன்று விஜயம் செய்து ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கலாசார முறைப்படி தெரிவித்து கொண்டார்.

ஜனாதிபதியின் பாரியான் ஷிரந்தி ராஜபக்ஷ.மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் பிரதமர் குடும்பத்தினரை வரவேற்று வாழ்த்துக்களை பரஸ்பரம் பரிமாறிக்கெண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வெல்லமுல்லிவாய்க்காலில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!

வெல்லமுல்லிவாய்க்காலில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!





சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெல்லமுல்லிவாய்க்கால் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்காக புத்தாண்டுக் கொண்டாட்ட விழா ஒன்றை அண்மையில் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது படைப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பல்வேறு சம்பிரதாய பூர்வ சமூக விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் சிறுவர்களும் இளைஞர் யுவதிகளும் போட்டிகளில் மிகவும் உற்சாகமாகக் கலந்து கொண்டனர். இதன் போது இப்பிராந்தியத்தை சேர்ந்த 3000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படன.இந் நிகழ்வில் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார்!

தென்கிழக்கு பல்கலைக்கழக நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்பார்!



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தையும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்துவைப்பார்.

அத்துடன்  ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிக்கான அடிக்கல்லையும் நடுவார்.

ஜனாதிபதியுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும்  உள்ளூர் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த வைபவங்கள் சம்மந்தமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு, நேற்று தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார், கலை கலாச்சார பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார், விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம், சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.எச்.நபார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்ககார?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குமார் சங்ககார?




இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் பாராளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சங்ககார உரையாற்றி கொண்டிருந்த போது, சங்ககார, பாராளுமன்றத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சங்ககார சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் இந்த கருத்துக்களுக்கு எந்த பதிலையும் வழங்காத சங்ககார சிரித்ததாக கூறப்படுகிறது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வடக்கில் புதிய கட்சி ஒன்று அங்குரார்ப்பணம்!

வடக்கில் புதிய கட்சி ஒன்று அங்குரார்ப்பணம்!



பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பின்னர் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் விஜயகாந்த் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அங்குரார்ப்பணம் செய்து ள்ளார்.

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலுள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இன்று நண்பகல் நடைபெற்ற நிகழ்வில் புதிய கட்சியை அங்குரார்ப்பணம் செய்து வைத்து அவர் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் - "இங்குள்ள கட்சிகள் ஒன்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியோ தேசியம் பற்றியோ சிந்திப்பதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளைப் பெறும் நோக்கிலேயே அரசியல்வாதிகள் மக்களைத் தேடி வருகின்றனர். "இந்த நிலையில், மக்களின் கல்வி, கலாசாரம், பண்பாட்டை கட்டி எழுப்பும் நோக்கிலேயே தனது கட்சி அங்குராட்பணம் செய்யப்படுகிறது" - எனத் தெரிவித்தார்.

விஜயகாந்த் குற்றச்செயல் ஒன்றில் தொடர்புபட்டார் எனத் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் வெளிவந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை!

வடக்கு கிழக்கு மக்களுக்கு மனநல ஆலோசனை!


யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கு விரைவில் மன நல ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டோருக்கு மனநல ஆலோசனைகளை வழங்குவது மிகவும் அவசியமானது என ஜனதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

யுத்த வலய மக்கள் எதிர்நோக்கக் கூடிய உளவியல் பிரச்சினைகள் மற்றும் ஏனைய அழுத்தங்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக சேவைகள், மகளிர் விவகாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு அமைச்சுக்களினால் இந்த ஆலோசனை சேவைகள் வழங்கப்படும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எவ்வாறான ஓர் பொறிமுறைமையின் கீழ் மன நல ஆலோசனைகளை வழங்குவது என்பது குறித்து அண்மையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளியோம்!

புலிகள் மீண்டும் தலைதூக்க இடமளியோம்!


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தாவது-



விடுதலைப் புலிகளை மீள் இணைக்கும் செயற்பாடு பதவிய காட்டுப் பகுதியில் இரகசியமாக நடைபெற்றுவந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இராணுவத்தினரால் தேடப்பட்டுவந்த கோபி உள்ளிட்ட மூன்று விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் பதவிய காட்டுப் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்து, பாதுகாப்பு தரப்பினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அப்போது தப்பி செல்ல முற்பட்ட மூவரும், பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்னர்.

உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புது வருடப்பிறப்பின்போது நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி இருப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும்  பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு!

கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு!






ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் கதிர்காம் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

முதலில் கிரிவிகாரைக்குச் சென்ற அவர் அங்கு நடைபெற்ற சமய வைபவங்களில் கலந்துகொண்டு ஆசீர்வாதம் பெற்றார்.

அதன் பின்னர் கதிர்காமம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துகொண்டார். அங்கு வந்திருந்த பொது மக்களைச சந்தித்து அவர்ளுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.

பாராளுமன்ற உறுப்பினர் சஜித் வாஸ் தலைமையிலான பிரமுகர்கள் இந்த நிகழ்வுகளில் பங்குபற்றினர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்