Tuesday, July 30, 2013

ஜனாதிபதி ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு!


ஜனாதிபதி ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (30) காலை அச்சு மற்றும் இலத்திரனியயல் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பொறுப்பாளர்களையும் ஊடகவியாலளர்களையும் சந்தித்து உரையாடினார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முக்கிய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரனது கருத்துக்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர்  ஜனாதிபதியிடம் கேள்வியொன்றை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த  ஜனாதிபதி விக்னேஸ்வரனுடன் தேவை ஏற்படின் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத்  தெரிவித்தார்.

இலங்கையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது மட்டும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டியதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றவரே மாகாண சபைகளுக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்படுவார். அவ்வாறாகவே இம்முறை தேர்தலும் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Monday, July 29, 2013

ஜப்பானிய அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!




ஜப்பானிய  அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜப்பானிய உள்விவகார மற்றும் தொடர்பாடல் அமைச்சர் யோஷிதக சிந்தோ இன்று (28) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

இலங்கைக்கும்  ஜப்பானுக்கும்  இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை - முக்கியமாக தகவல்தொடர்புத் துறை உட்பட பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

2011 ஆம் ஆண்டு ஜப்பானில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது இலங்கை அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும் உதவிகளுக்கும் ஜப்பானிய அமைச்சர் இலங்கைக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் யாப்பான் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 57.8 பில்லியன் ரூபாவை வழங்க ஜப்பான் பிரதமர் இணக்கம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேச்சுவார்த்தையில் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அமைச்சின் செயலாளர் சரித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள்  கலந்துகொண்டனர். (எம்.ரி.-977)

Friday, July 26, 2013

20 ஆம் நூற்றாண்டில் ஊடகம்


நற்பண்புகளால் பெரும்பான்மை மக்களின் மனங்களை வெல்வோம்!

-பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத்-

-எம்.ஜே.எம். தாஜுதீன்

இலங்கையில் உள்ள பெரும்பான்மை மக்களில் சிலர் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக இனரீதியான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்ற போதிலும் முஸ்லிம்கள் தமது சிறந்த பண்புகளால் அவர்களின் மனங்களை வெல்ல முயற்சிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத் தெரிவித்தார்.

20 ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வொன்று நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் நேற்று (22)  சனிக்கிழமை  முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ். முஹம்மத் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்-

விரல் நுனியில் செயற்படும் அளவுக்கு இன்றைய ஊடகத்துறை வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் இறைத் தூதை முழு உலகுக்கும் எத்திவைத்த எமது ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதை எவரும் மறுத்திட முடியாது.

சகல துறைகளிலும் இலங்கை முஸ்லிம்கள் இன்ற எழுச்சி பெற்றுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால்தான் முஸ்லிம் சமுகத்தின் மீது பெரும்பான்மைச் சமூகத்தினர் இனரீதியான செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் முறியடிக்கும் சக்தி முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஊடகத்துறை மிகவும் பலம் வாய்ந்தது. ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் திறன் கொண்டது.

எனவே இன்றை இளைஞர்கள் ஊடகத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்று சமூகத்தைக் காக்கும் உயரிய பணியில் பங்குகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமை உரையாற்றுகையில்-

திறமையான முஸ்லிம் ஊடகவியலாளர்களை நாடு முழுவதிலும் உருவாக்கும் எமது எண்ணக்கருவுக்கு ஏற்ப முஸ்லிம் மீடியா போரத்தின் 40 ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று நீர்கொழும்பில் நடைபெறுகின்றது.

உலகின் நான்காவது சக்தியாக திகழும் ஊடகத்தின் பெறுமதியை உணர எமது முஸ்லிம் சமுகம் தவறிவிட்டமை மிகவும் துரதிஷ்டவசமானது.

இந்த நிலையை மாற்றியமைக்கும் கடும் முயற்சியில் எமது முஸ்லிம் மீடியா போரம் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து நாடு முழுவதிலும் மாணவர்களுக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஊடகத்துறைப் பயிற்சியை அளித்து வருகின்றது.

தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உள்ளது போன்று முஸ்லிம்களுக்கும் தனியான ஊடகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முஸ்லிம் தனவந்தர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு இன்றைய இளைய சமூகத்தினருக்கு தெரியாமலிருப்பது கவலைக்குரிய விடயம். இதனை ஏனைய மக்களும் அறிந்துகொள்ள வழியேற்படுத்த திறமை மிக்க ஊடகவியலாளர்கள் எமது சமூகத்தில் உருவாக வேண்டும்.

இன்றை எமது இளைம் சமூகத்தினரிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் தினசரிப் பத்திரிகைளை வாசிக்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றௌரும் இதில் அதிக அக்கரை காட்டவேண்டும் என்றும் கூறினார்.

நீர்கொழும்புப் பிரதேசத்தில் கல்விப் பணிப்பாளராக- காதி நீதிபதியாக- சமூக சேவையாளராக நீண்ட காலம் கடமையாற்றிய எம். ஆர். எம். மிஹினார் மற்றும்; கல்வித்துறையிலும் ஊடகத்துறையிலும் சிறந்த பணியாற்றிய கிச்சிலான் அமதுர்ரஹீம் ஆகியேர் இந்த ஊடகச் செயலமர்வில் பொன்னாடை போh;த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம்- சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஷீத் எம். ஹபீல் ஆகியோரும் உரையாற்றினர்.

கலைவாதி கலீல்- எச்.எம். பாயிஸ்- ஜாவிட் முனவ்வர்- அஸ்கர் கான் ஆகியயோர் இங்கு விரிவுரைகளை நடத்தினர்.









நீர்கொழும்பு ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மூடப்பட்டதேன்?



நீர்கொழும்பு ஆயுர்வேத சிகிச்சை நிலையம் மூடப்பட்டதேன்?



நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலை அடுத்துள்ள சோனகத் தெருவில் 159 ஆவது கிராம சேவையாளர் பிரிவில் இயங்கி வந்த ஆயூர்வேத சிகிச்சை நிலையம் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது.


இங்கு இலவச ஆயூர்வேத சிகிச்சை பெற்றுவந்த வரிய மக்கள் இதனால் முக்கியமாக வயோதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இப்பிரதேசத்தில் உள்ள ஆயூர்வேத வைத்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற்று பாடசாலைகளுடன் தொடர்பு படுத்தி இந்த சிகிச்சை நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்ய முடியும்.


நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் இது விடயத்தில் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு அந்த லவச வைத்திய சேவையை மீண்டும் வழங்க ஆவண செய்யவேண்டும்.

               - தகவல் சுஜாயில் முனீர்

Wednesday, July 24, 2013

யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!


யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!

-கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன-

-எம்.ஜே.எம். தாஜுதீன்

மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் 342 சிறுவர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.



கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 15 மில்லியன் ரூபா நிதியுதவி மூலம் ஆனையிறவில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இன்று (24) காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில்
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாகாணங்களின் ஆளுநர்கள்- முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள்  கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

யுத்தம் காரணமாக சேதமடைந்த வட பகுதிக்கான ரயில் பாதையை அரசாங்கம் புதிதாக அமைத்து வருகின்றது.  

சுமார் 23 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ஆணையிறவுக்கான ரயில் நிலையம் அதே இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவ மாணவிகள்- ஆசிரியர்களிடமிருந்து கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இரண்டு ரூபா வீதம்  சேகரிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபா செலவிலேயே  இந்த புதிய ரயில் நிலையம்  நிர்மாணிக்கப்படவுள்ளது.

தெற்குப் பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல வசதிகளும் வட பகுதி மாணவர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Tuesday, July 23, 2013

நீர்கொழும்பில் யாழ். முஸ்லிம் சமூக ஒன்றுகூடலும் இப்தாரும் -2013


நீர்கொழும்பில் யாழ். முஸ்லிம் சமூக ஒன்றுகூடலும் இப்தாரும் -2013

-எம்.ஜே.எம். தாஜுதீன்

முஸ்லிம் சமுகத்தின் யாழ். பூர்வீக உரிமையை நினைவு படுத்தும் யாழ். முஸ்லிம் சமூக ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்ச்சியும் நாளை 22 ஆம் திகதி நீர்கொழும்பி;ல் நடைபெறும்.

சமூக- கல்வி அபிவிருத்தி அமைப்பு இந்த நிகழ்வை நீர்கொழும்பில் 12 ஆவது முறையாகவும் ஏற்பாடு செய்துள்ளது.

பெரியமுல்லை ஜும்ஆ பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி ஐ.எல்.எம். ஹனீபா தலைமையில் கொழும்பு வீதியில் உள்ள பரகத் திருமண மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு ஒன்றுகூடலும் இப்தாரும் இடம்பெறும்.

இந்த நிகழ்வில் திஹாரி தன்வீர் அகடமி விரிவுரையாளர் மௌலவி எம்.எஸ். அப்துல் முஜீத் (கபூரி) 'முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தும் மாற்றுச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

யாழ் மாவட்ட ஊடகவியலாளர் கருத்தரங்கு இன்று!


யாழ் மாவட்ட ஊடகவியலாளர் கருத்தரங்கு இன்று!

-எம்.ஜே.எம். தாஜுதீன்

யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக  அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள ஊடகக் கருத்தரங்கு  இன்று 23 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறுகிறது .



மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்களின் பங்களிப்புஎன்ற தலைப்பில் யாழ் மாவட்ட பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறும் இந்த கருத்தரங்கில்-   வட மாகாண ஆளுநர்  மேஜர்  ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி-  பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பிரதம அதிதியகளாக கலந்துக் கொள்கிறார்கள்.

அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல இக்கருத்தரங்கின் நோக்கம் பற்றி சற்று நேரத்துக்கு முன்னர் விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட அபிவிருத்திச் செயற்திட்டங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் உரையாற்றினார்.

தினகரன் பிரதம ஆசிரியர் எஸ்.தில்லைநாதன் - சிரேஷ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான ஏ.பீ. வைஸ் ஆகியோரும்  இங்கு விரிவுரைகளை நிகழ்த்துவர் என இக்கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரான பிரதித் தகவல் பணிப்பாளர் ஏ. ஹில்மி முஹம்மத் தெரிவித்தார்.