Saturday, March 29, 2014

தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் அறிவிக்க சகல ஊடகங்களும் தயார் நிலையில்!

தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் அறிவிக்க சகல ஊடகங்களும் தயார் நிலையில்!






அரசாங்க தகவல் திணைக்களத்தின் அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்திலிருந்து மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்காக  சகல ஊடக நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் ஆணையாளரின் கையொப்பத்துடன் உடனடியாக அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் தேர்தல் பெறுபேறுகள், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் உடனடியாகவே ஊடகங்களுக்கு விநியோகிக்கப்படும்.

இது தொடர்பான ஏற்பாடுகள் அனைத்தும் தற்சமயம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை முதல் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் வரை சகல ஊடக நிறுவனங்களினதும் ஊடகவியலாளர்களுக்கும்  ஏனைய உதவியாளர்களுக்கும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சகல வசதிகளும் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்க தகவல் திணைக்களத்திலுள்ள சகல இலத்திரன் ஊடகங்களும் தமது நேயர்களுக்கு உடனுக்குடன் தேர்தல் பெறுபேறுகளை வழங்குவதற்காக ஒளி-ஒளிபரப்பு கூடங்களையும் அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைத்துள்ளன.

இருபது வானொலி நிலையங்களும் ஒன்பது தொலைக்காட்சி நிலையங்களும் இன்று இப்பொழுது அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து தமது ஒளி-ஒலிபரப்புகளை  ஆரம்பித்துள்ளன. அவ்வாறே அச்சக ஊடகங்களுக்கும் தேர்தல் பெறுபேறுகளை வழங்கவும் திணைக்களம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளன.

கையடக்க தொலைபேசி குறுந்தகவல் சேவையும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்த இணையத்தளமான  http://www.news.lk/ , http://www.sinhala.news.lk,  http://tamil.news.lk/ஆகிய இணையத்தளங்கள் மூலமும் சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் உலக நாடுகளுக்கு உடனுக்குடன் செய்திகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதி தமது பாரியார் சகிதம் வாக்களிப்பு!

ஜனாதிபதி தமது பாரியார் சகிதம் வாக்களிப்பு!




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மெதமுலன டி.ஏ. ராஜபக்‌ஷ வித்தியாலயத்தில் இன்று காலை தமது பாரியார் சகிதம் 7.45 அளிவில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகின.

இன்று நண்பகல் வரை அமைதியான வாக்களிப்பு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11.00 மணிக்கு!

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11.00 மணிக்கு!


தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 11.00 மணியளவில் வெளியாகும் எனவும் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்  தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மற்றும் தென் மகாணசபை தேர்தல் முடிவுகள் நாளை அதிகாலை 4.00 மணிக்கு முன்னர் வெளியாகும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து 77 மீனவர்கள் விடுதலை!

ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து 77 மீனவர்கள்  விடுதலை!



யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 58 இந்திய மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டமை, தடை செய்யப்பட்ட வலை மற்றும் படகு வகைகளைப் பாவித்தமை  போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் அவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கைச் சிறைகளில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த உத்தரவின் தொடர் நடவடிக்கையாகவே இவர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களை விடுவிப்பதற்கான நீதிமன்ற உத்தரவை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார்  வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வழங்கினார்.

இதேவேளை - மன்னாரிலும் நேற்று   19 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட 58 பேரும், மன்னாரில் விடுக்கப்பட்ட 19 பேரும் - இன்று சனிக்கிழமை, நாளை  ஞாயிற்றுக்கிழமை இந்தியா திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை - மன்னாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 21 இந்திய மீனவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி திங்கட்கிழமை விடுவிக்கப்படுவர் என தெரிவிக்கப்படுகின்றது.

-எம்.ஜே,எம். தாஜுதீன்

Thursday, March 27, 2014

பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஆய்வு மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!

பறவைகளின் இனப்பெருக்கம் மற்றும் ஆய்வு மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!








அம்பாந்தோட்டை நாகரவெவ பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பறவை இனங்களின் இனப் பெருக்கம் மற்றும் ஆய்வு மத்திய நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

38 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மத்திய நிலையத்தில் உலகில் உள்ள அரிய வகை பறவைகளையும் அழிந்துபோகும் நிலையில் உள்ள பறவையினங்களையும் பராமரிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பறவையினங்கள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது ஆய்வுகளை இந்த மத்திய நிலையத்தில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறப்புவிழாவில் பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

பொதுபல சேனா செயலாளரிடம் 50 கோடி ரூபா கேட்கிறார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்!

பொதுபல சேனா செயலாளரிடம் 50 கோடி ரூபா கேட்கிறார் அமைச்சர் ரிசாத் பதியுதீன்!




தன்மீது அவதூறு கூறியதற்காக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்  மன்னிப்பு கோர வேண்டும் என்றும் இல்லையேல்  50 கோடி ரூபாவை நஷ்ட ஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பதில் கோரும் கடிதம் ஒன்றை சட்டத்தரணிகள் மூலம் அமைச்சர் பொதுபல சேனா அமைப்பின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது-

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த 20 ஆம் ஆம் திகதி கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் என்மீது பல பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தார்.

வில்பத்து தேசய பூங்கா என்னால் அழிக்கப்படுவதாகவும், வில்பத்து தொடக்கம் மன்னார் வரையில் ஒரு முஸ்லிம் வளையம் என்னால் உருவாக்கப்படுவதாகவம், வட மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு வீடுகள் அமைப்பதில் தலையிட்டு இலங்கையை ஆக்ரமிப்பதாகவும், நான் நீதிமன்றத்தை தாக்கியதாகவும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்தச் செய்திகளுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

எதுவித ஆதாரங்களும் இல்லாத இந்தக் குற்றச்சாட்டுக்கள்  சிங்கள மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை உருவாக்க களம் அமைத்துள்ளன.

எனவே இப்பொய்க் குற்றச்சாட்டுக்களை அவர் இரண்டு வாரங்களுக்குள் வாபஸ் பெற்று மன்னிப்புக் கோர வேண்டும். இல்லாவிட்டால் நஷ்ட ஈடாக 50 கோடி ரூபா செலுத்தவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதியைச் சந்தித்து பிரியாவிடை பெற்றார் மாலைதீவு உயர் ஸ்தானிகர்!

ஜனாதிபதியைச் சந்தித்து பிரியாவிடை பெற்றார் மாலைதீவு உயர் ஸ்தானிகர்!


சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மாலைதீவு உயர் ஸ்தானிகர் ஹுசைன் சிஹாப் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பிரியாவிடை பெற்றார்.

தமது சேவைக் காலத்தில் ஜனாதிபதி வழங்கிய ஒத்துழைப்புக்கு மாலைதீவு உயர் ஸ்தானிகர் நன்றி தெரிவித்தார். ஹுசைன் சிஹாபின் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேலும் பலமடைந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

உலக இளைஞர் மாநாடு பற்றி உலக நாடுகளுக்கு தகவல்!

உலக இளைஞர் மாநாடு பற்றி உலக நாடுகளுக்கு தகவல்!



இவ்வருடம் மே மாதத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாடு தொடர்பான தகவலை 40 நாட்களுக்குள் 18 நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு உத்தியோகபூர்வமாக எடுத்துச் செல்லும் முயற்சியை இலங்கை இளைஞர் சம்மேளனம் ஆரம்பித்துள்ளது.

சம்மேளனத்தின் பிரதம செயலாளர் சமன் குமார தலைமையில் ஐவர் கொண்ட குழுவொன்று இதற்காக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளனர்.

இக்குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள அவரது கால்டன் இல்லத்தில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

இலங்கையின் புகழை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று வாழ்த்திய ஜனாதிபதி இலங்கையின் தேசிய கொடியை அக்குழுவினரிடம் கையளித்தார்.

உலக இளைஞர் சம்மேளனத்தின் செயற்குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி பள்ளிவாசலில் விசேட சமய நிகழ்ச்சிகள்!

ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி பள்ளிவாசலில் விசேட சமய நிகழ்ச்சிகள்!





தாய்நாட்டுக்கு எதிரான அனைத்து சவால்களையும் வெற்றி கொள்வதற்கு ஜனாதிபதிக்கு நல்லாசி வேண்டி, மாத்தறை கொடப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் விசேட சமய நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த சமய நிகழ்வில், இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும உட்பட பெருந்திரளானோர் கலந்துக் கொண்டனர்.

மௌலவி என்.ஆர்.அஷ்ரப் இங்கு சமய நிகழ்ச்சிகளை நடத்தி வைத்தார். பள்ளிவாசல் விசேட சமய நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி, அங்கு குழுமியிருந்த மக்களுடனும் ,சிறுவர் சிறுமிகளுடனும்  மிகவும் சினேகபூர்வமாக கலந்துரையாடினார்.

தாய்நாட்டுக்கெதிராக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை தோற்கடிக்கச்செய்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழவும் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தங்கு தடையின்றி மேற்கொள்ளவும் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் ஆசி வேண்டியே இந்த விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது

-எம்.ஜே.எம். தாஜுதீன்

தெஹிவல விளையாட்டரங்குக்கு நவீன வசதிகளுடன் புனரமைப்பு!

தெஹிவல விளையாட்டரங்குக்கு நவீன வசதிகளுடன் புனரமைப்பு!





தெஹிவலயில் உள்ள விளையாட்டரங்கு நவீன வசதிகள் கொண்டதாக புனரமைக்கப்படவுள்ளது. புனரமைப்பு பணிகளுக்கான அத்திவாரக் கல்லை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமண்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் நேற்று நட்டினர்.

தெஹிவல - கல்கிஸ்ஸை நகரசபையின் பிரதேச அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இந்த விளையாட்டரங்கின் முதற்கட்ட புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக 150 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.

பூப்பந்து விளையாட்டுக்கான வசதி, நீச்சல் தடாகம், மலசலகூட வசதி இருக்கைகள், நடைபாதை மற்றும் உடற்பயிற்சிக்கான சாதனங்கள் போன்ற பல்வேறு வசதிகளையும் கொண்டதாக இந்த விளையாட்டரங்கு நவீன மயப்படுத்தப்படவுள்ளது.

அடிக்கல் நடும் வைபவத்தில் அமைச்சர் மொஹான் லால் கிரேறு, தெஹிவல-கல்கிஸ்ஸை மாநகரசபை முதல்வர் தனசிரி அமரதுங்க, நகராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்