Wednesday, January 8, 2014

பலஸ்தீனத்தில் 'மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி நிலையம்' திறந்துவைப்பு!

பலஸ்தீனத்தில் 'மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி நிலையம்' திறந்துவைப்பு!





பலஸ்தீனத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பாலஸ்தீனத்தின் பெட்டுனியா நகரத்தில் 'மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி நிலையத்தை' நேற்று முன்தினம் (06) திறந்து வைத்தார்.

பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் ரியாத் அல் மலிகி அவர்களுடன் வருகை தந்த ஜனாதிபதி அவர்களையும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ அம்மையாரையும் பெட்டுனியா நகராதிபதி ரிபி டப்ளியு. தோலா மற்றும் ரமல்லா ஆளுநர் கலாநிதி லைலா கமாம் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த தொழிற் பயிற்சி நிலையத்திற்கு இலங்கை அரசு நிதியங்களை வழங்கியுள்ளது.  பெட்டுனியா மாநகர சபை நூலகத்திற்கு நூல்களையும் கணனிகளையும் இலங்கை அன்பளிப்புச் செய்துள்ளது.

சுற்றுலாத்துறை போன்ற இலங்கைக்கு சிறப்பறிவுள்ள துறைகளில் பலஸ்தீன் இளைஞர் யுவதிகளுக்கு துறைசார்ந்த இலங்கையர்கள் மூலம் இங்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சி நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்ததன் பின்னர் பெட்டுனியா மாநகர சபை பூங்காவுக்குச் சென்ற ஜனாதிபதி ராஜபக்ஷ  அங்கு ஒலிவ் மரக்கன்று ஒன்றை நாட்டினார்.

அதன் பின்னர் இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்திற்கு சென்ற ஜனாதிபதி அவர்களும் ஜனாதிபதியின் பாரியாரும் அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஜனாதிபதி அவர்களின் பெயரிடப்பட்ட பாதையை பார்வையிட்டார்.

இலங்கை, பலஸ்தீன ஒத்துழைப்பு குழுவின் ஆரம்ப தலைவராக ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய சேவையை கெளரவிக்கும் முகமாக இப்பாதைக்கு 2007 நவம்பர் மாதம் மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை எனப் பெயரிடப்பட்டுள்ளது.

-எம்.ஜே.எம். தாஜுதீன்



No comments:

Post a Comment