Friday, January 10, 2014

ஆயர்களின் கூற்றை மறுக்கிறது இராணுவம்!

ஆயர்களின் கூற்றை மறுக்கிறது இராணுவம்!



இலங்கை இராணுவம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொத்து (கிளஸ்டர்) மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்தியதாக யாழ், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் கூறியுள்ள கூற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர் குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் தலைமையிலான குழுவினரிடம் யாழ்ப்பாண ஆயர் தோமஸ் செளந்தர நாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் சுமத்திய குற்றச்சாட்டுக்களை  இலங்கை இராணுவத்தின் சார்பில் தான் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களை தவிர சம்பிரதாய முறைக்கு அப்பால் எந்தவித ஆயுதங்களையும் யுத்தத்தின் போது பயன்படுத்தவில்லை என்று திட்டவட் டமாகத் தெரிவித்த அவர்,  இலங்கை விமானப்படை ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உறுதி செய்த பயங்கரவாதிகளின் இலக்கை தவிர வேறு எந்த இடத்திற்கும் விமானத் தாக்குதலை நடத்தவில்லை என்றும்  சுட்டிக்காட்டினார்.

முப்பது வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிளஸ்டர் குண்டுகளையோ, இரசாயன குண்டுகளையோ இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சிலரும், வெளிநாட்டில் சொகுசாக வாழ நினைக்கும் சிலருமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் சகலராலும் மதிக்கத்தக்க கெளரவம் மிக்க ஒரு மதத் தலைவரான மன்னார் மறைமாவட்ட ஆயரின் மேற்படி கூற்று மிகவும் மன வருத்தத்துக்குரிய தொன்றாகும். ஏனெனில், இவ்வாறான கூற்றானது புலம்பெயர்ந்திருந்து எமது நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் சிலரது செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றது என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment