கச்சைத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமை இல்லை!
-இந்திய மத்திய அரசு பதில்-
கச்சைத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் கேள்விக்கு இந்திய மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மேலும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன் காரணமாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்வதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இலங்கை கடற்படையின் தாக்குதல்களிலில் இருந்து இந்திய மீனவர்களைப் பாதுகாத்திடும் வகையில் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் எல்.டி.ஏ. பீட்டர் ராயன் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று (23.01.14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மத்திய அரசு மேற்கண்ட விளக்கமளித்தது.
மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
கடல் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையே கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன. இரு நாடுகளுக்கும் அவரவர் நாட்டு எல்லைப் பகுதிகளில் உள்ள முழு இறையாண்மையை அந்த ஒப்பந்தங்கள் உறுதி செய்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லைப் பிரச்சினையும், கச்சைத் தீவு யாருக்கு சொந்தம் என்பதும் ஏற்கெனவே முடிந்து போன பிரச்சினை.
கச்சைத் தீவுப் பகுதியைப் பொறுத்தமட்டில் இந்திய மீனவர்கள் வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் அங்கு செல்லலாம். அங்குள்ள அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபடும் உரிமை நம் மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கச்சைத் தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை.
-எம்.ஜே.எம். தாஜுதீன்