Friday, December 20, 2013

பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது!


பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது!

-பிரதமர் உத்தரவு-
Displaying prime-minister.jpeg


பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது. புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம். ஆனால் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளிலும் பொலிஸார் தலையிடக்கூடாது என்று பிரதமரும் பௌத்தசாசன மதவிவகார அமைச்சருமான டி.எம். ஜயரத்தின உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியபோதே இந்த உத்தரவினை அவர் விடுத்திருக்கின்றார்.

கொழும்பு தெகிவளைப் பிரதேசத்திலுள்ள 3 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடைவிதித்திருந்தனர். அத்துடன் கொஹுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருல் சாபி பள்ளிவாசல்மீது இனந்தெரியாத நபர்கள் புதன்கிழமை இரவு தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் எம்.பி.க்கள் நேற்று (20) பிற்பகல் பிரதமர் டிஎம். ஜயரத்தினவைச் சந்தித்து தமது விசனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போதே பள்ளிவாசல்கள் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது என்ற உத்தரவை பிரதமர் பிறப்பித்துள்ளார்.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட அமைச்சர் பி.எச்.எம். பௌசி தலைமையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம். ஏ.எல்.எம். அதாவுல்லா, ரிஷாத் பதியுதீன், பஷீர் சேகுதாவூத் ஆகியோர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
தெகிவளை பகுதியில் அத்திடிய மஸ்ஜிதுல் ஹிபா, களுபோவில மஸ்ஜிதுல் தாருல் ஷாபி, தெகிவளை தாருல் அர்கம் ஆகிய 3 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

அத்துடன் கொகுவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருல் சாபி பள்ளிவாசல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் இவ்வாறு பள்ளிவாசல்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவது முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயத்தில் மதவிவகார அமைச்சரான நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அமைச்சர்களும் எம்.பிக்களும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்காவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் தெகிவளை பகுதி பள்ளிவாசல்கள் விவகாரம் குறித்து கேட்டறிந்ததுடன் பள்ளிவாசல் விவகாரத்தில் பொலிஸார் தலையிடக்கூடாது.

புதிதாக அமைக்கப்படும் பள்ளிவாசல்கள் தொடர்பில் சட்டதிட்டங்களை அமுல்படுத்தலாம். பழைமையான பள்ளிவசால்கள் விடயத்தில் பொலிஸார் தலையீடுகளை மேற்கொள்ளக்கூடாது என்று பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பள்ளிவாசல்கள் விவகாரம் தொடர்பில் பிரதமர் நேரடியாக கவனம்செலுத்த வேண்டும். அமைச்சின் செயலாளர் இதுதொடர்பில் முடிவுகளை எடுப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் முஸ்லிம் அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

அத்துடன் பௌத்த சாசன அமைச்சு எதிர்வரும் திங்கட்கிழமை செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தினை இரத்துச்செய்ய வேண்டும் என்றும் பிரதமர் தலைமையிலேயே இத்தகைய கூட்டம் இடம்பெறவேண்டும் எனவும் அமைச்சர்கள் வலிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து இந்த கூட்டத்தினை இரத்துச்செய்த பிரதமர் பள்ளிவாசல்கள் தொடர்பில் எத்தகைய முடிவுகள் எடுப்பதானாலும் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சின் செயலாளருக்கும் உத்தரவிட்டுள்ளார்
-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment