ஆசியாவின் கேந்திர நிலையமாக அம்பாந்தோட்டை மாறியுள்ளது!
-அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைக்கும் பணிகளை ஆரம்பிக்கும்போதும் அதற்குப் பின்னரும் பலர் பல்வேறு குற்றசாட்டுக்களை முன்வைத்தனர். ஆனால் இன்று ஆசியாவில் பிரதான வர்த்தக போக்குவரத்து கேந்திர நிலையமாக அது மாறியுள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
இன்று (03) காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்-
கடந்த மாதம் நடைபெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாடு பெருமளவிலான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. இம்மாநாட்டில் 85 சீன வர்த்தகர்கள்- 77 இந்திய வர்த்தகர்கள்- 18 மலேசிய வர்த்தகர்கள்- 22 நைஜீரிய வர்த்தகர்கள் ஐக்கிய ராச்சியத்திலிருந்து 138 வர்த்தகர்கள்- அமெரிக்காவிலிருந்து 16 வர்த்தகர்கள்- அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலிருந்து முறையே 3- 25 வர்த்தகர்கள் உட்பட சுமார் சுமார் 1000 வர்த்தகர்கள் கலந்துகொண்டனர் .
வர்த்தக மாநாட்டைத் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான 50 விண்ணப்பங்கள் முதலீட்டுச் சபைக்கு கிடைத்துள்ளது. சில ஒப்பந்தங்கள் பொதுநலவாய மாநாட்டின் போது கைச்சாத்திடப்பட்டன.
புதிய முதலீடுகள் தொடர்பில் அரசாங்கத்துக்கெதிரான பல கருத்துக்களை பலர் கூறி வருகின்றனர். ஏனெனில் பொருளாதாரரீதியில் பலவீனப்படுத்தினால் மட்டுமே அரசாங்கத்தை வீழ்த்த முடியும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் தவறான தகவல்களை அவர்கள் பரப்புகின்றனர்.
வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றால் மட்டுமே பொருளாதார வளர்ச்சியை 8 வீதமாக அதிகரிக்கச்செய்ய முடியும். அவ்வாறு பொருளாதார வளர்ச்சி 8 வீதமாக அதிகரிக்கப்படுமாக இருப்பின் 3 பில்லியன் ரூபா வருமானம் நாட்டுக்கு கிடைக்கும். இந்த வளர்ச்சியையடைய உள்நாட்டு முதலீடு 24 வீதமாகவும் வெளிநாட்டு முதலீடு குறைந்தது 30 வீதமாகவும் இருப்பது மிக அவசியம்.
இலங்கையில் சீனா பாரிய முதலீடுகளை செய்துள்ளது. ஆசிய நாடுகள் 65 சதவீதமும் ஐரோப்பிய நாடுகள் 35 சதவீதமும் முதலீடு செய்துள்ளன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment