2016 முதல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இல்லை!
தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட மாட்டாதென கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்தார்.
பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக இதுவரை காலமும் போட்டிப் பரீட்சையாக நடத்தப்பட்டு வந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை தவணைப் பரீட்சை போன்று ஒரு மதிப்பீட்டு பரீட்சையாகவே நடத்தப்படும் எனவும் அமைச்சர்கூறினார்.
ஆயிரம் மஹிந்தோதய பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 2016 ஆம் ஆண்டளவில் பிரபல்யமான பாடசாலைகளாக உருவாக்கப்படுவதனால் சிறார்களின் பிள்ளைப் பருவத்தை துன்பப்படுத்தும் வகையிலான போட்டி மிக்க புலமைப் பரிசில் பரீட்சையொன்று நடத்தப்பட வேண்டியதன் அவசியமில்லையெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இதற்கிணங்க 2016 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் போட்டித் தன்மை ஏற்படாதெனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதேவேளை அரசாங்க உத்தியோகத் தர்களின் இடமாற்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியன தவிர்ந்த எக்காரணம் கொண்டும் தரம் 2 முதல் தரம் 5 வரையில் அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்களென்பது குறித்து கல்வியமைச்சு தீர்க்கமான முடிவுக்கு வந்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
கல்வியமைச்சில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment