Thursday, August 29, 2013

இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் நவநீதம் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம்!



இராஜதந்திர வரையறைகளுக்கு அப்பால் நவநீதம் பிள்ளைக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம்!


-அமைச்சர் கெஹெலிய அறிவிப்பு-


இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு இராஜதந்திர வரையறைகளுக்கும் அப்பால் எமது அரசு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளது. அவர் விரும்பிய இடமெல்லாம் சென்று வர சகல வசதிகளையும் அரசாங்கம் வழங்கியுள்ளது என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) தகவல் ஊடகத்துறை அமைசில் நடைபெற்றபோது அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.


யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.


அது பற்றி அறிந்து செல்லவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எமது அழைப்பின் பேரில் இலங்கை வந்துள்ளார். அவர் எங்கெங்கு செல்ல வேண்டும் என நாம் வழிநடத்தவில்லை. அவர் விரும்பிய இடங்களுக்குச் செல்ல சர்வதேச இராஜதந்திர வரையறைகளுக்கும் அப்பால் சென்று அனுமதி வழங்கியுள்ளோம்.


ஏனெனில் அவரிடம் மறைப்பதற்கு இலங்கை அரசிடம் எதுவும் இல்லை. அவர் நேற்று முள்ளிவாய்க்காலுக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் கலந்துரையாடியுள்ளார்.


அவர் இப்போது வந்திருப்பதை விட முள்ளிவாய்க்காலில் புலிகள் லட்சக்கணக்கான மக்களை மனிதக் கேடயங்களாக பிடித்துவைத்திருத்தபோது வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அவர் இலங்கையில் எங்கும் செல்லலாம். எவரையும் சந்திக்கலாம். எந்தக் கருத்தையும் தெரிவிக்கலாம் ஆனால் இலங்கை அரசாங்க நிருவாக செயற்பாடுகளில்- அதாவது யாரை அமைச்சராக்குவது- எவருக்கு எந்தப் பதவி வழங்குவது என்பன குறித்த அதிகாரம் அவருக்கு ஒரு நூல் அளவுகூட இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். (எம்.ரி.-977)

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment