வெலிவேரிய பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை இடமாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று (12) திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இந்த உத்தரவை அவர் பிறப்பித்தார்.
வெலிவேரிய பிரதேச மக்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி இப்பிரச்சினைக்குத் தீர்வாக பின்வரும் நான்கு விடயங்களை அறிவித்தார்.
1.வெலிவேரிய பிரதேச மக்கள் தூய்மையான குடிநீரைப் பெற்றுக்கொள்வது உறுதி செய்யப்படவேண்டும்
2.அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களம் இப்பிரதேச நீரைப் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்
3.சம்பந்தப்பட்ட தொழிற்சாலை சட்டங்களுக்கு முரணாக இயங்கியது அந்த அறிக்கையில் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக தொழிற்சாலை மூடப்படும்
4.தொழிற்சாலை சட்டங்களை மீறி செயற்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டால் குறிப்பிட்;ட காலக்கெடு வழங்கி முதலீட்டு சபையின் வலயத்திற்குள்ளேயே தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.
அப்போது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளதோடு 20ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். (எம்.ரி.-977)
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment