Tuesday, November 5, 2013

பொதுநலவாய மாநாட்டு பாதுகாப்புக்கு 20 ஆயிரம் பொலிஸார் கடமையில்!


பொதுநலவாய மாநாட்டு பாதுகாப்புக்கு  20 ஆயிரம் பொலிஸார் கடமையில்!

-சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தகவல்-



பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு- அம்பாந்தோட்டை உட்பட நாடு முழுவதிலும் 20 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.


இன்று பிற்பகல் (05) அரசாங்க திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தகவல் தெரிவிக்கையில்- இம்மாதம் 9ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் உட்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தரவுள்ளமையினால் போக்குவரத்து பாதைகள் தேவைக்கேட்ப மூடி மீண்டும் திறக்கப்படும்.

ஆனால் பொது மக்களுக்கு சிரமங்கள் ஏற்படும் வகையில் மணித்தியாலக்கணக்கான போக்குவரத்து தடைகள் ஏற்படாது. ஆகக்கூடியது 20 - 40 நிமிடங்கள் மட்டுமே போக்குவரத்து தடை ஏற்படும்.

இக்காலப்பகுதியில் மொரட்டுவையிலிருந்து கொழும்புக்கு விசேட ரயிலொன்றை ஏற்பாடு செய்யுமாறு ரயில் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு பாதைகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் என்றும் வெளிப்பிரதேசங்களிலிருந்து கொழும்புக்கு மக்கள் வருவதை முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும் குறுந்தகவல்கள் மூலம் பரப்பப்படும் வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

பொதுமக்களை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான நடவடிக்கைகள் பாரிய குற்றமாக கருதப்பட்டு அவ்வாறான வதந்திகளை பரப்புகிறவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் வாகன போக்குவரத்து பிரதி பொலிஸ் மாஅதிபர் அமரசிறி சேனாரத்ன- பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன- தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல- தகவல் ஊடக அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment