சமாதானத்தை விரும்பாதவர்களே ஜெனீவாவில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்!
-66 ஆவது சுதந்திர தின உரையில் ஜனாதிபதி-
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. சமாதானத்தை தெற்கு மக்கள் மட்டுமல்ல வடக்கு மக்களும் அனுபவித்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு முயற்சிப்போர் சமாதானத்தை விரும்பாதவர்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
66ஆவது சுதந்திரதினத்தின் பிரதான வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வைபவம் கேகாலை சுதந்திர மாவத்தையில் நடைபெற்றது. சுதந்திரதினத்தின் பிரதான வைபவம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அந்த மாவத்தையை ஜானதிபதி திறந்து வைத்தார்.
அதிதிகள் வருகையை அடுத்து குதிரைப்படை சகிதம் முப்படைகளின தளபதியும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ பிரதான மேடையை வந்தடைந்தார். அவரை பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையிலான குழுவினர் வரவேற்று பிரதான மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று இனங்களையும் சேர்ந்த 110 மாணவிகள் தேசிய கீதமிசைக்க தேசியக்கொடியை ஏற்றிவைத்ததுடன், உயிரிழந்த முப்படையினருக்கும் தேசபிமானிகளுக்கும் இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டன.
அவர் அங்கு நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
"வரலாற்று புகழ்மிக்க கேகாலையில் 66ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடுவதையிட்டு பெருமையடைகின்றோம். நாடு அபிவிருத்தி பாதையில் முன்னேறிக்கொண்டிருகின்றது. இவற்றுக்கெல்லாம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமையே முக்கியமான காரணமாகும்.
2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரே வடக்கு மக்கள் சுதந்திரத்தை அனுபவித்துவருகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரையிலும் ஒரு குண்டுகூட வெடிக்கவில்லை. அவ்வாறு சுதந்திரத்தை வடக்கு மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில், வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்கள் மனித உரிமை, ஜனநாயகம் ஆகியவற்றை முன்னிறுத்திக்கொண்டே நாட்டுக்குள் வருகின்றனர்.
நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் நோக்கில் ஜெனீவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் நாட்டுக்கு நன்மைகள் ஏற்படப் போவதில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களை சர்வதேச சமூகம் மறந்து விட்டது. மிகக் கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை புலிகள் கொன்றனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வடக்கு மக்கள் முதல் அனைவரும் சுதந்திரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்த சுதந்திரத்தை தட்டிப்பறிக்க எவரையும் இந்த அரசாங்கம் அனுமதிக்காது.
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட உள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தை பலம்பொருந்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment