மாநாடு பற்றிய சரியான தகவல்களை தமிழ் ஊடகங்கள் வழங்கவேண்டும்!
-அஸ்வர் எம்.பி கோரிக்கை-
இலங்கையின் பொருளாதார- மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்கு பாரிய பங்களிப்பை ஏற்படுத்தி தரவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு பற்றி மக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு செல்வது தமிழ் ஊடகங்களின் கடமை என தகவல் ஊடகத் துறை அமைச்சின் மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பின் எ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (28ம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- 1977ம் இலங்கையில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டின் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய மாநாடு இதுவாகும். 30 வருடகால கொடூர யுத்தம் நடைபெற்று ஓய்ந்த பின்னர் நடக்கும் இம்மாநாடு அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெற்றது.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் மாநாட்டுக்கு வருவதாக இன்றுவரை உறுதியளித்துள்ளன.. இது இன்னும் அதிகரிக்கும் என்ற நாம் நம்புகிறோம். நாட்டின் பொருளாதார- கட்டுமான- முதலீட்டு அபிவிருத்திகளுக்கு இந்த மாநாடு சிறந்த பாதையமைத்துக் கொடுக்கும். உல்லாசப் பயணத்துறையின் விரைவான அபிவிருத்தியடையும்.
ஆபிரிக்க நாடுக்கள் மத்திய கிழக்கு நாடுகள் என அனைத்து நாடுகளும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வருகையால் இலங்கையில் முதலீடு செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நாட்டுக்கு வருமானம் பெருகும்.
கொழும்பில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன என இந்திய பத்திரிகைகள் இன்னமும் செய்தி வெளியிடுகின்றன. நாட்டைப் பற்றிய தவறான செய்திகளை பரப்ப பல சக்திகள் முயல்கின்றன. நமது நாட்டின் தற்போது நிலவும் அமைதியான சூழ்நிலை- அபிவிருத்தி என்பவற்றை சர்வதேசம் கண்டு உண்மை நிலையை அறிய இந்த மாநாடு சிறந்த சந்தர்ப்பமாகும்.
அரசியல் இலாபம் கருதி தமிழ்நாட்டில் இலங்கை பிரச்சினையை பூதாகரமாக கிளப்புகின்றனர். ஆனால் டில்லி சரியான தீர்மானத்தை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment