யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன!
-கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன-
-எம்.ஜே.எம். தாஜுதீன்
மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட 321 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாகவும் 342 சிறுவர் பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 15 மில்லியன் ரூபா நிதியுதவி மூலம் ஆனையிறவில் சகல வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இன்று (24) காலை இடம்பெற்ற இந்த நிகழ்வில்
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி புதிய ரயில் நிலையத்திற்கான நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மாகாணங்களின் ஆளுநர்கள்- முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
யுத்தம் காரணமாக சேதமடைந்த வட பகுதிக்கான ரயில் பாதையை அரசாங்கம் புதிதாக அமைத்து வருகின்றது.
சுமார் 23 வருடங்களுக்கு பிறகு முதற்தடவையாக ஆணையிறவுக்கான ரயில் நிலையம் அதே இடத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளது.
வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலை மாணவ மாணவிகள்- ஆசிரியர்களிடமிருந்து கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் இரண்டு ரூபா வீதம் சேகரிக்கப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபா செலவிலேயே இந்த புதிய ரயில் நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தெற்குப் பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல வசதிகளும் வட பகுதி மாணவர்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment