நற்பண்புகளால் பெரும்பான்மை மக்களின் மனங்களை வெல்வோம்!
-பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத்-
-எம்.ஜே.எம். தாஜுதீன்
இலங்கையில் உள்ள பெரும்பான்மை மக்களில் சிலர் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக இனரீதியான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்ற போதிலும் முஸ்லிம்கள் தமது சிறந்த பண்புகளால் அவர்களின் மனங்களை வெல்ல முயற்சிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத் தெரிவித்தார்.
20 ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வொன்று நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரியில் நேற்று (22) சனிக்கிழமை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ். முஹம்மத் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
விரல் நுனியில் செயற்படும் அளவுக்கு இன்றைய ஊடகத்துறை வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் இறைத் தூதை முழு உலகுக்கும் எத்திவைத்த எமது ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதை எவரும் மறுத்திட முடியாது.
சகல துறைகளிலும் இலங்கை முஸ்லிம்கள் இன்ற எழுச்சி பெற்றுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால்தான் முஸ்லிம் சமுகத்தின் மீது பெரும்பான்மைச் சமூகத்தினர் இனரீதியான செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.
இவற்றையெல்லாம் முறியடிக்கும் சக்தி முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஊடகத்துறை மிகவும் பலம் வாய்ந்தது. ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் திறன் கொண்டது.
எனவே இன்றை இளைஞர்கள் ஊடகத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்று சமூகத்தைக் காக்கும் உயரிய பணியில் பங்குகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமை உரையாற்றுகையில்-
திறமையான முஸ்லிம் ஊடகவியலாளர்களை நாடு முழுவதிலும் உருவாக்கும் எமது எண்ணக்கருவுக்கு ஏற்ப முஸ்லிம் மீடியா போரத்தின் 40 ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று நீர்கொழும்பில் நடைபெறுகின்றது.
உலகின் நான்காவது சக்தியாக திகழும் ஊடகத்தின் பெறுமதியை உணர எமது முஸ்லிம் சமுகம் தவறிவிட்டமை மிகவும் துரதிஷ்டவசமானது.
இந்த நிலையை மாற்றியமைக்கும் கடும் முயற்சியில் எமது முஸ்லிம் மீடியா போரம் பல சவால்களுக்கும் முகம் கொடுத்து நாடு முழுவதிலும் மாணவர்களுக்கும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஊடகத்துறைப் பயிற்சியை அளித்து வருகின்றது.
தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் உள்ளது போன்று முஸ்லிம்களுக்கும் தனியான ஊடகங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான முஸ்லிம் தனவந்தர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு இன்றைய இளைய சமூகத்தினருக்கு தெரியாமலிருப்பது கவலைக்குரிய விடயம். இதனை ஏனைய மக்களும் அறிந்துகொள்ள வழியேற்படுத்த திறமை மிக்க ஊடகவியலாளர்கள் எமது சமூகத்தில் உருவாக வேண்டும்.
இன்றை எமது இளைம் சமூகத்தினரிடம் வாசிப்புப் பழக்கம் இல்லை. இந்த நிலை மாற வேண்டும். மாணவர்கள் தினசரிப் பத்திரிகைளை வாசிக்க ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றௌரும் இதில் அதிக அக்கரை காட்டவேண்டும் என்றும் கூறினார்.
நீர்கொழும்புப் பிரதேசத்தில் கல்விப் பணிப்பாளராக- காதி நீதிபதியாக- சமூக சேவையாளராக நீண்ட காலம் கடமையாற்றிய எம். ஆர். எம். மிஹினார் மற்றும்; கல்வித்துறையிலும் ஊடகத்துறையிலும் சிறந்த பணியாற்றிய கிச்சிலான் அமதுர்ரஹீம் ஆகியேர் இந்த ஊடகச் செயலமர்வில் பொன்னாடை போh;த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம்- சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஷீத் எம். ஹபீல் ஆகியோரும் உரையாற்றினர்.
கலைவாதி கலீல்- எச்.எம். பாயிஸ்- ஜாவிட் முனவ்வர்- அஸ்கர் கான் ஆகியயோர் இங்கு விரிவுரைகளை நடத்தினர்.